சீனாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.4 கோடி தையல் ஊசிகள் பறிமுதல் 3 பேர் கைது

சீனாவில் இருந்து சென்னைக்கு கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள தையல் ஊசிகளை சுங்க வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-19 22:23 GMT
சென்னை, 

கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், சட்டையில் குத்தப்படும் ஊசி மற்றும் துணி மணிகளுக்கான கயிறு என்ற பெயரில் சீனாவில் இருந்து தையல் எந்திரத்தில் பயன் படுத்தப்படும் ஊசிகள் கன்டெய்னரில் கடத்தி கொண்டுவரப்பட்டு உள்ளதாக சென்னை சுங்கவரி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாதவரம் சரக்கு பெட்டக நிலையத் தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த குறிப்பிட்ட கன்டெய்னரில் சுங்கவரி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சுங்கவரி செலுத்திய பொருட்களுக்கு இடையே வைத்து வரி செலுத்தாமல் தையல் எந்திரங்களில் பயன்படுத்தப்படும் ஊசிகளும் கடத்தி கொண்டுவரப்பட்டது, தெரியவந்தது. அதில் 2.87 கோடி தையல் ஊசிகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3.84 கோடி ஆகும். இதற்கு ரூ.5.63 கோடி சுங்க வரி செலுத்தவேண்டும். ஆனால் அவர்கள் சுங்க வரி செலுத்தவில்லை.

3 பேர் கைது

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் தையல் ஊசிகளை கடத்திகொண்டு வந்ததாக எஸ்.எல்.விஜய் மற்றும் மகாவீர் குமார் ஜெயின் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே சரக்கு பெட்டகத்தில் இருந்து தையல் ஊசி இருந்த கன்டெய்னரை போலியான ஆவணங்களை காண்பித்து எடுத்துச்சென்று, குடோனில் மறைத்து வைத்திருந்த உகா ராம் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் இதேபோல ரூ.2 கோடி மதிப்புள்ள 1.6 கோடி தையல் ஊசிகளை ரூ.3.27 கோடி வரி ஏய்ப்பு செய்து அண்மையில் கடத்தி கொண்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் நிலவும் தேவைப்பாட்டை ஈடுகட்டுவதற்காக வெளிநாடுகளில் இருந்து தையல் ஊசிகள் கடத்தி கொண்டுவரப்படுகின்றன.

மேற்கண்ட தகவல் சென்னை சுங்கவரித்துறை கமிஷனர் (தடுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்