நான் நட்சத்திர ஓட்டலில் தங்கியதை நிரூபித்தால் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்கிறேன் குமாரசாமிக்கு எடியூரப்பா சவால்
நான் நட்சத்திர ஓட்டலில் தங்கியதை நிரூபித்தால் எனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய் கிறேன் என்று சட்டசபையில்குமாரசாமிக்கு எடியூரப்பா சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
3 நாட்கள் முதல்-மந்திரியாக இருந்தபோது, நான் நட்சத்திர ஓட்டலில் தங்கியதை நிரூபித்தால் எனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய் கிறேன் என்று சட்டசபையில் குமாரசாமிக்கு எடியூரப்பா சவால் விடுத்துள்ளார்.
அறை இருப்பது உண்மை
கர்நாடக சட்டசபையில் நேற்று குமாரசாமி பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
நான் நட்சத்திர ஓட்டலில் தங்கி ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதாக எடியூரப்பா கூறுகிறார். அங்கிருந்தபடி அரசு அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வது குறித்து முடிவு எடுப்பதாகவும் சொல்கிறார். நட்சத்திர ஓட்டலில் எனக்கு ஒரு அறை இருப்பது உண்மை தான். இல்லை என்று நான் மறுக்கவில்லை.
ராஜினாமா செய்கிறேன்
ஆனால் நான் பெங்களூரு ஜே.பி.நகர் வீட்டில் தான் வசிக்கிறேன். எடியூரப்பா 3 நாட்கள் மட்டும் முதல்-மந்திரியாக இருந்தபோது, நட்சத்திர ஓட்டலில் தங்கி அரசு அதிகாரிளை இடமாற்றம் செய்தார். அவர் நட்சத்திர ஓட்டலில் தங்கியதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா குறுக்கிட்டு, “நான் நட்சத்திர ஓட்டலில் தங்கியதை நிரூபித்தால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். முதல்-மந்திரி சொல்வது தவறானது. நான் அவ்வாறு நட்சத்திர ஓட்டலில் தங்கவில்லை” என்றார்.
18 மணி நேரம் உழைக்கிறேன்
அப்போது மீண்டும் பேசிய குமாரசாமி, “எனது உடல்நிலை எப்படி உள்ளது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அவ்வாறு இருந்தும் நான் தினமும் 18 மணி நேரம் உழைக்கிறேன். சில நேரங்களில் சாப்பிடாமல் கூட அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி உத்தரவுகளை பிறப்பிக்கிறேன்” என்றார்.