கடலூர் அரசு பெரியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரியில் கலெக்டர் அன்புச்செல்வன் நேரில் ஆய்வு செய்தார்.
கடலூர்,
2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தற்போது இருந்தே தொடங்கி விட்டது. இதையொட்டி கடலூரில் வாக்கு எண்ணிக்கை மையமான தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக்கல்லூரியில் நேற்று கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சப்-கலெக்டர்கள் சரயூ(கடலூர்), பிரசாந்த்(விருத்தாசலம்), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, நெய்வேலி தனித்துணை ஆட்சியர்(நில எடுப்பு) ஆறுமுகம், தேர்தல் தாசில்தார் பாலமுருகன், மற்றும் தாசில்தார்கள் சத்தியன் (கடலூர்), விஜயா(குறிஞ்சிப்பாடி), ஆறுமுகம் (பண்ருட்டி), கவியரசு(விருத்தாசலம்), கண்ணன்(திட்டக்குடி) மற்றும் விருத்தாசலம் நகராட்சி ஆணையர் பாலா ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் அன்பு செல்வன் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு(2019) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகளை கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாக்கு எண்ணும் அறைகள், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகள் மற்றும் அதன் பாதுகாப்பு தன்மை, பாதுகாப்பு அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடுவதற்கான வசதிகள், மின்சாரம் மற்றும் கழிவறை வசதி, தொலைத்தொடர்பு உபகரணங்களை பயன்படுத்தும் வகையில் தொலைத்தொடர்பு உள்ளிட்ட போதிய வசதிகள் செய்வதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.