வறட்சி நிவாரண பணிகள் குறித்து தவறான தகவல்கள் வழங்கும் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்வேன் சட்டசபையில் குமாரசாமி எச்சரிக்கை

வறட்சி நிவாரண பணிகள் குறித்து தவறான தகவல்களை வழங்கும் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்வேன் என்று சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2018-12-19 22:30 GMT
பெங்களூரு, 

வறட்சி நிவாரண பணிகள் குறித்து தவறான தகவல்களை வழங்கும் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்வேன் என்று சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி எச்சரிக்கை விடுத்தார்.

கூட்டத்தை கூட்டி...

கர்நாடக சட்டசபையில் நேற்று வறட்சி தொடர்பான விவாதத்தின்போது, குமாரசாமி பேசியதாவது:-

கர்நாடகத்தில் நிலவும் வறட்சி குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி விவாதித்தேன். அந்த பகுதிகளில் எக்காரணம் கொண்டும் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

உரிய நடவடிக்கை

வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வதில் அலட்சியம் காட்டினால், அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சினை பற்றி உறுப்பினர்களுக்கு தகவல் வந்தால், அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.

வறட்சிப்பகுதிகளை ஆய்வு செய்த பா.ஜனதாவினர் அதுபற்றிய விவரங்களை எங்களுக்கு வழங்கினால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

நிதி ஒதுக்கவில்லை

அப்போது பா.ஜனதா உறுப்பினர் பசவராஜ் பொம்மை குறுக்கிட்டு பேசுகையில், “வறட்சி பற்றி அரசிடம் தகவல் இல்லையா?. அரசு எந்திரம் என்ன செய்கிறது?” என்றார்.

அதன் பிறகு பா.ஜனதா உறுப்பினர் சி.எம்.உதாசி பேசியபோது, “குடிநீர் பிரச்சினைக்கு நிதி ஒதுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் நிதி ஒதுக்கவில்லை. எத்தனை முறை கலெக்டரை நேரில் சந்திப்பது?” என்றார்.

ரூ.1 கோடியை...

அதைத்தொடர்ந்து ேபசிய பா.ஜனதாவை சேர்ந்த இன்னொரு உறுப்பினர் ஈசுவரப்பா, “குடிநீர் பிரச்சினையை தீா்க்க மாநில அரசு வறட்சி தாலுகாக்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. அது போதாது. உடனடியாக ரூ.1 கோடியை ஒரே தவணையில் விடுவிக்க வேண்டும்” என்றார்.

அதன் பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

பட்டுவாடா செய்யவில்லை

கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறையாக உள்ளது. குடிநீர் பிரச்சினையும் நிலவுகிறது. கடந்த ஆண்டு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்த டேங்கர் லாரிகளுக்கு இன்னும் வாடகை பணம் பட்டுவாடா செய்யவில்லை.

கோசாலைகளை திறக்கவில்லை. நாட்டில் 24 மாவட்டங்கள் வறட்சி பகுதிகள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் கர்நாடகத்தில் மட்டும் 16 மாவட்டங்கள் உள்ளன. மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

பணி இடைநீக்கம்

இதற்கு பதிலளித்த குமாரசாமி, “வறட்சி நிவாரண பணிகள் குறித்து விவரங்களை பெறுகிறேன். இந்த விஷயத்தில் யாராவது தவறான தகவல்களை வழங்கினால், அத்தகைய அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தர விடுவேன்” என்றார்.

மேலும் செய்திகள்