ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி காட்டுப்பகுதியில் பிடிபட்டார்

ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் இருந்துதப்பி ஓடிய கைதி ஆரணி காட்டுபகுதியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

Update: 2018-12-19 23:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் சனவெளி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரபாண்டியன். பூசாரியான இவர் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம நபர் ஒருவர் நகை, பணம் முதலியவற்றை திருடிவிட்டு தலைக்கவசம் அணிந்து தப்பி ஓடினார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை வியாசர்பாடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் சந்தோஷ்குமார் (வயது28) என்று தெரிவித்தார். பொதுமக்கள் தாக்கியதால் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நள்ளிரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். கைதியை தப்பவிட்டதாக பாதுகாப்பு பணியில் இருந்த தொண்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுல்த்தான்இப்ராகிம், திருப்பாலைக்குடி போலீஸ் நிலைய காவலர் திருகாகிதமூர்த்தி, ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலைய தலைமை காவலர் பாலமுருகன், காவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

தனிப்படை போலீசார் தப்பி ஓடிய கைதியை தீவிரமாக தேடிவந்த போது வாலிபர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தப்பி ஓடிய வாலிபர் திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் ஊராட்சி மகரல் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் டேனியல் என்ற யுவராஜா என்பது தெரியவந்தது. சோழவரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், போலீசார் டேனியலை தேடிவருவதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து டேனியல் யுவராஜாவை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் அவர் தமிழக–ஆந்திர மாநில எல்லை பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதுவயல் காட்டுபகுதிக்குள் பதுங்கி இருந்தார். அவரை ரகசியமாக கண்காணித்த தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்தபோது ராமநாதபுரத்தில் புல்லட் ஒன்றினை திருடி அதில் திருச்சி வரை சென்று அங்கு புல்லட்டை நிறுத்திவிட்டு பஸ் மூலம் சென்னை சென்றதாகவும் கூறப்படுகிறது. போலீசார் தேடுவதை அறிந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று பதுங்கியிருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் டேனியல் யுவராஜை பத்திரமாக அழைத்து வந்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து, சப்–இன்ஸ்பெக்டர் பாண்டி உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் கைவரிசை காட்டிய நபர் என்பதால் அவரிடம் போலீசார் அதுகுறித்து தகவல்களையும் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் பாதுகாப்பில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்