பவானியில் கைத்தறிக்கூடங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

பவானியில் உள்ள கைத்தறிக்கூடங்களில் மாவட்ட கலெக்டர் கதிரவன் திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2018-12-19 23:00 GMT

பவானி,

பவானியில் தொடக்க கைத்தறி நெசவாளர் சங்கம் மற்றும் கைத்தறிக்கூடங்கள் உள்ளன. இங்கு ஜமுக்காளம் நெய்யும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் கதிரவன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பவானி பகுதியில் உள்ள அனைத்து கைத்தறிக்கூடங்களுக்கும் சென்ற கலெக்டர் கதிரவன், அங்கு பணிபுரிபவர்களிடம் வேலை குறித்து கேட்டு அறிந்தார். மேலும் கைத்தறிக்கூடங்களில் நெய்யப்படும் ஜமுக்காளம் மற்றும் போர்வைகளை அவர் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பவானி தொடக்க கைத்தறி நெசவாளர் சங்கத்துக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வு குறித்து மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்கும் விலையில்லா வேட்டி–சேலைகளின் மொத்த தேவையில் 60 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் இருந்துதான் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 57 லட்சத்து 71 ஆயிரம் சேலைகளும், 62 லட்சத்து 85 ஆயிரம் வேட்டிகளும் கொள்முதல் நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 57 லட்சத்து 37 ஆயிரம் சேலைகளுக்கும், 57 லட்சத்து 23 ஆயிரம் வேட்டிகளுக்கும் உற்பத்தி குறியீடு வழங்கப்பட்டு, கொள்முதல் நிறுவனங்கள் மூலம் அந்தந்த தாலுகாக்களுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 190 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் போர்வை, ஜமுக்காளம், துண்டு, வேட்டி, சேலை போன்றவை சிறந்த முறையில் கைவேலைப்பாடுகளுடன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. அதன்படி 200 யூனிட் விலையில்லா மின்சாரம் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரத்து 724 நெசவாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 303 பேருக்கும், குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 384 பேருக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 687 பேருக்கு மாதம்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் பிச்சமுத்து உள்பட அரசு அதிகாரிகள் இருந்தனர்.

மேலும் செய்திகள்