உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

Update: 2018-12-19 21:09 GMT
தளி,

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் நேற்று குளிர்கால கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணி வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் மொத்தமுள்ள 21 பீட்டுகளிலும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பீட்டுக்கும் தலா 2 குழுக்கள் வீதம் மொத்தம் 126 பேர் 42 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

ஒவ்வொரு குழுவிலும் உள்ள வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டைத்தடுப்பு காவலர், தன்னார்வலர்கள், செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் 3 நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளுக்கு 5 கிலோ மீட்டர் வீதம் வனப்பகுதிக்கு சென்று அங்கு காணப்படும் ஊன் உண்ணிகள் தடயங்கள் சேகரிக்கப்படும்.

அடுத்த 3 நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நேர்கோட்டு பாதையில் சென்று வனவிலங்குகளின் காலடி குளம்புங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். அப்போது நேர்கோட்டு பாதையில் தென்படும் பறவையினங்கள். மனிதர்கள் நடமாட்டம், வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவுசெய்யப்படும். யானை, காட்டெருமை, புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, குரங்குகள் குறித்தும் அதன் கால்தடம், எச்சங்களை வைத்து கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இறுதி நாளில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அதன் பின்பாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள்.

இந்த நிலையில் நேற்று உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஏழுமலையான் கோவில் பிரிவு பகுதியில் வனவிலங்குகளின் கால்தடத்தை வைத்து அது எந்த வகையான விலங்குகள் என குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனப்பகுதிகளில் அவர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்