ஊத்துக்குளி அருகே சரக்குவேன்–லாரி மோதல்; டிரைவர் பலி
ஊத்துக்குளி அருகே சரக்கு வேன்–லாரி மோதிய விபத்தில் சரக்குவேன் டிரைவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊத்துக்குளி,
கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு சென்றது. பின்னர் அங்கு காய்கறிகளை இறங்கி விட்டு, கர்நாடக மாநிலத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதியை சேர்ந்த குருசாமி (வயது 45) ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே கர்நாடக மாநிலம் செங்குன்றான்புரம் பகுதியை சேர்ந்த வினோத் (27) மற்றும் குண்டல்பேட் சிங்காரபிரிவு பகுதியைச் சேர்ந்த கணேஷ் (25) ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
இந்த சரக்கு வேன் ஊத்துக்குளியை அடுத்த குன்னத்தூர் சாலையில் தாளப்பதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே குன்னத்தூர் பகுதியிலிருந்து தேங்காய் பருப்புகளை ஏற்றிக்கொண்டு செங்கப்பள்ளி நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஈரோட்டை சேர்ந்த நூரூல் (30) ஓட்டி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் சரக்குவேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சரக்கு வேனை ஓட்டி வந்த குருசாமி பலியானார். இந்த விபத்தில் வினோத், கணேஷ், மற்றும் தேங்காய் பருப்புகளை ஏற்றி வந்த லாரி டிரைவர் நூரூல் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குருசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் செங்கப்பள்ளி குன்னத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.