திருப்பூர் மாநகரில் சொத்து வரி உயர்வு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்; ஆணையாளரிடம் அனைத்துக்கட்சியினர் மனு
திருப்பூர் மாநகரில் சொத்து வரி உயர்வு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் அனைத்துக்கட்சியினர் நேற்று மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை அனைத்துக்கட்சி சார்பில் க.செல்வராஜ்(தி.மு.க.), கிருஷ்ணன்(காங்கிரஸ்), ரவி(இந்திய கம்யூனிஸ்டு), மூர்த்தி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சிவபாலன்(ம.தி.மு.க.), ரவிக்குமார்(த.மா.கா.) மற்றும் நிர்வாகிகள் ஆணையாளர் சிவகுமாரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிவிதிப்புகளுக்கு அபரிமிதமாக சொத்துவரி உயர்த்தியதை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்துக்கட்சி சார்பில் போராடி வருகிறோம். ஏற்கனவே சொத்து வரி உயர்வை கண்டித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது மாநகராட்சி ஆணையாளர் இந்த வரி உயர்வு குறித்து அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளையும் அழைத்துப்பேசி கருத்துக்களை கேட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் இதுவரை மாநகராட்சி நிர்வாகம் அரசியல் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 100 சதவீதம் வரியை உயர்த்தி திருத்தி அமைக்க ஆணையிட்டு இருப்பதாகவும், சதுர அடிக்கு ரூ.1.80 முதல் ரூ.3 வரை மதிப்பீடு செய்து வரியை உயர்த்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு மாறாக திருப்பூர் மாவட்ட அரசிதழ் வெளியீட்டில் 1 சதுர அடிக்கு ரூ.1.80 முதல் ரூ.12 வரை வரி நிர்ணயம் செய்வதற்கு மாமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் முறையாக ஆட்சேபனை தெரிவித்த பின்னரும் எந்தவித ஆட்சேபனையும் வரவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி முடிவு செய்ய வேண்டும். மேலும் சொத்து வரி உயர்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.