புயல் நிவாரண பொருட்களை முறையாக வழங்கக்கோரி 4 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

புயல் நிவாரண பொருட்கள் முறையாக வழங்கக்கோரி 4 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2018-12-19 22:45 GMT
கந்தர்வகோட்டை,

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடிசை, ஓட்டு வீடுகளை கணக்கெடுத்து அவர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றின் நகல்களை பெற்றுக்கொண்டு, அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகையை வரவு வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரசால் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக வழங்காமல் வசதியானவர்களுக்கு டோக்கன் வழங்கி நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருவதாக கூறியும், நிவாரண பொருட்கள் முறையாக வழங்கக்கோரியும், கறம்பக்குடி-கந்தர்வகோட்டை சாலையில் சுந்தம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல கந்தர்வகோட்டை தாலுகா நெப்புகை கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் முறையான நிவாரணம் வழங்கக்கோரி கறம்பக்குடி-கந்தர்வகோட்டை சாலையில் நெப்புகை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல அரிமளம் 8-ம் மண்டபகப்படி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசின் நிவாரண பொருட்கள் முறையாக வழங்கக்கோரி புதுக்கோட்டை-அரிமளம் சாலையில் பொதுமக்கள் மறியல் செய்தனர். அவர்களிடம் திருமயம் தாசில்தார் ரமேஷ், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன், போலீஸ் இன்ஸ்பெக் டர்கள் மனோகரன், கவுரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்படாதவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். புதுக்கோட்டை-அரிமளம் சாலையில் அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழக அரசின் நிவாரண பொருட்களை அனைவருக்கும் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தாசில்தார் ரமேஷ் பேச்சு வார்த்தை நடத்தியதன்பேரில், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 4 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்