தொடர் நகை திருட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி அலுவலர் உள்பட 2 பேர் கைது
தொடர் நகை திருட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளி அலுவலர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி கிழக்கு மற்றும் மகாலிங்கபுரம் போலீஸ் நிலைய பகுதிகளில் தொடர்ந்து நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து திருட்டில் ஈடுபடும் ஆசாமிகளை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடைவீதியில் உள்ள ஒரு நகை கடையில் 2 பேர் நகையை விற்பனை செய்ய வந்தனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த கடைக்காரர் இதுகுறித்து கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் கிணத்துக்கடவு கொண்டம்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 31), கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (19) என்பது தெரியவந்தது. பி.சி.ஏ. படித்து உள்ள சுரேஷ்குமார் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இவரது உறவினர்களான சிவக்குமார், பாலமுருகன் ஆகியோர் சுரேஷ்குமாருக்கு ஆசை வார்த்தை கூறி, திருட்டு தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த 16-ந்தேதி ஜோதி நகரை சேர்ந்த வந்தனா என்பவரது வீட்டின் ஜன்னல் வழியாக கையை விட்டு 5 பவுன் நகையை திருடி சென்றனர். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன் பி.கே.எஸ். காலனியை சேர்ந்த உஷா நந்தினி என்பவரது வீட்டில் 11 பவுன் நகையும், மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2¾ பவுன் திருடுபோன வழக்கிலும் தொடர்புள்ளது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் இருந்து 18¾ பவுன் நகையை போலீசார் மீட்டனர். இதையடுத்து சிவக்குமார், சுரேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பாலமுருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.