நாகர்கோவிலில் பரிதாபம் லாரி மோதி போலீஸ் அதிகாரியின் தாய் பலி

நாகர்கோவிலில் லாரி மோதி போலீஸ் அதிகாரி தாய் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-12-19 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் திரவியம் (வயது 74), போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விஜயலட்சுமி (66). இவர்களுக்கு கோபால் உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கோபால் சென்னையில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் திரவியம் நேற்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு நாகர்கோவிலுக்கு ஸ்கூட்டரில் வந்தார். ராணிதோட்டம் போக்குவரத்து கழக பணிமனையை தாண்டி வந்தபோது திரவியம் முன்னால் சென்ற ஒரு ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி, எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய திரவியமும், விஜயலட்சுமியும் ரோட்டில் விழுந்தனர். அந்த சமயத்தில், லாரியின் சக்கரத்தில் விஜயலட்சுமி சிக்கி கொண்டார். இதனால் விஜயலட்சுமி மீது லாரி ஏறி இறங்கியது.

இந்த விபத்தில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். திரவியம் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று திரவியத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான விஜயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் அதிகாரி தாய் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்