மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தவறான வரலாற்றை தெரிவிக்கக்கூடாது வழிகாட்டிகளுக்கு, சுற்றுலாத்துறை அறிவுரை

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தவறான வரலாறுகளை கூறி ஏமாற்ற கூடாது என்று சுற்றுலா வழிகாட்டிகள் கூட்டத்தில் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2018-12-19 23:00 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் சுற்றிக்காட்ட சுற்றுலா கைடுகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், மாமல்லபுரம் புராதன சிற்பங்கள் குறித்த வரலாறுகளை கைடுகள் சரியாக கூறாமல், தவறான வரலாறுகளை திரித்து கூறி ஏமாற்றி சுற்றி காட்டுவதாகவும் சில கைடுகள் மீது மாமல்லபுரம் சுற்றுலாத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா வழிகாட்டிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சுற்றுலா கைடுகளுக்கு பல்வேறு விதிமுறைகள் விதித்தும், பல்வேறு அறிவுரைகள் வழங்கியும் சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல் பேசினார்.

மதுகுடித்து விட்டு

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இங்குள்ள கைடுகள் அவர்களுக்கு புராதன சின்னங்களை சுற்றிக்காட்டும்போது உண்மையான, சரியான வரலாறுகளை கூறி சுற்றி காட்டி பயணிகளை திருப்திபடுத்த வேண்டும். தவறான வரலாறுகளை கூறி சுற்றிக்காட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுற்றுலா வழிகாட்டி புத்தகத்தில் உள்ள பல்லவர்களின் வரலாறுகளை முழுமையாக படித்து அதன்படி வரலாற்று சம்பவங்களை எடுத்து கூறி சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

மேலும் சுற்றுலா கைடு பணிகளுக்கு செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் மது குடித்து விட்டு செல்லக்கூடாது.

அடையாள அட்டை

கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களை சுற்றிக்காட்டும் கைடும் முறையான ஒரு கட்டணத்தை நிர்ணயித்து பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். கைடுகள் தங்கள் இஷ்டம்போல் ஆளாளுக்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தில் ஒரு கட்டணத்தை முறையாக நிர்ணயித்து அதன்படி பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

சுற்றுலா கைடு பணிகளுக்கு செல்லும் வழிகாட்டிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை சுற்றுலா வழிகாட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் மூத்த சுற்றுலா வழிகாட்டி ஆலோசகர் எம்.கே.சீனிவாசன், சுற்றுலா வழிகாட்டிகள் சங்க நிர்வாகிகள் டி.ராஜேந்திரன், எஸ்.யுவராஜ், வ.பாலன், மல்லை சிவா மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள், சுற்றுலாத்துறை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்