வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடம் அவமதிப்பு: விசாரணைக்கு அழைத்து சென்ற 2 பேரை விடுவிக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல்
வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடம் அவமதிப்பு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற 2 பேரை விடுவிக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சுரண்டை,
வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடம் அவமதிப்பு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற 2 பேரை விடுவிக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கீழச்சுரண்டையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 பேர் விசாரணைக்கு அழைப்பு
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத்தலைவர் என்.வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தை அவமதிப்பு செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் மர்மநபர்கள் படத்தை பதிவிட்டிருந்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நெல்லை மாவட்டம் கீழச்சுரண்டையை சேர்ந்த 3 வாலிபர்கள் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடி தூத்துக்குடி போலீசார் நேற்று கீழச்சுரண்டைக்கு சென்றனர். அங்கு வீடுகளில் அவர்கள் இல்லை. இதனால் சம்பந்தப்பட்ட வாலிபரின் உறவினர்களான 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது பெண்களை அழைத்து செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததன் பேரில், ஆனந்தராஜ் (வயது 27), காளிதுரை (30) ஆகிய இருவரை மட்டும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
சாலைமறியல்
மேலும் இதுதொடர்பாக கீழச்சுரண்டை மேற்கு பஸ்நிறுத்தம் அருகே மதியம் 12 மணியளவில் சம்பந்தப்பட்ட வாலிபரின் உறவினர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் தாசில்தார் நல்லையா, தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், சுரண்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. ஆகவே போலீசார் அழைத்து சென்ற 2 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதுவரை சாலைமறியலை கைவிட மாட்டோம் என்றனர். பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். மதியம் 3 மணி வரை நடந்த இந்த சாலைமறியல் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மற்றொரு தரப்பினர் மறியல்
இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் மற்றொரு தரப்பினர் சுரண்டை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடம் அவமதிப்பு தொடர்பான 3 வாலிபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சாலைமறியல் செய்தனர். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.