தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் சிறுபான்மையினர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் சிறுபான்மையினர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் வள்ளலார் தெரிவித்தார்.

Update: 2018-12-19 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நாகூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் வள்ளலார் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் கமல்கிஷோர் முன்னிலை வகித்தார். விழாவில் இயக்குனர் வள்ளலார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவின் முக்கிய நோக்கம், சிறுபான்மையின மக்கள் பொருளாதார மேம்பாட்டில் கல்வியிலும், பிற துறைகளிலும் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் சமமாக விளங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான திட்டங்களை சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு கடன்களை வங்கிகள் மூலம் வழங்கி வருகிறது. சிறு தொழில் தொடங்க தனிநபர் கடனாக ரூ.30 லட்சம் வரையிலும், குடும்ப ஆண்டு வருமானத்தை பொருத்து கடன் உதவிகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ பிரிவினரும் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்காக நிதி உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் ஊனத்திற்கான உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மையின மக்கள் தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் வள்ளலார் 2 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார். இதில் துணை கலெக்டர் வேலுமணி, உதவி ஆணையர்(கலால்) வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்