8 வழிச்சாலைக்கு எதிராக மனு கொடுக்க சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த விவசாயிகள் போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆவேசம்-தர்ணா போராட்டம்
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு ஆட்சேபனை மனு கொடுக்க ஊர்வலமாக வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சேலம்,
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், மரங்கள் உள்ளிட்டவை அழியும் என தெரிவித்து 8 வழிச்சாலைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலங்களில் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையில் சமீபத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தபட உள்ள நிலம் தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில் ஏற்கனவே சாலைக்காக நிலம் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்ட இடங்களை விட கூடுதலாக நிலம் கையகப்படுத்த உள்ளதாக சர்வே எண் வெளியிடப்பட்டது.
மேலும் நிலம் எடுப்புக்கு ஆட்சேபனை இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் 21 நாட்களுக்குள் கலெக்டரிடம் எழுத்து மூலமாக மனு தாக்கல் செய்யலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் நேற்று அயோத்தியாப்பட்டணம், சுக்கம்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், நிலவாரபட்டி, நாழிக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆட்சேபனை மனு கொடுப்பதற்காக சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டனர். இதற்கு டவுன் போலீசார் அனுமதி மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போஸ் மைதானத்தில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், குமார், நாகராஜன் மற்றும் போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். விவசாயிகள் விடாப்பிடியாக இருந்ததால் அவர்களை ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதித்தனர். பின்னர் விவசாயிகள் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்துக்கொண்டும், கரும்புகளை ஏந்திக்கொண்டும் ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, சேலம் மாநகராட்சி அலுவலகம் வழியாக சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகளை போலீசார் சோதனை செய்து மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர். அப்போது விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்து அவர்களை சமரசம் செய்தனர். விவசாயிகளிடம் இருந்து மனு வாங்க கலெக்டர் அலுவலக கீழ்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் 550-க்கும் மேற்பட்ட ஆட்சேபனை மனுக்களை கொடுத்து விட்டு சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் நிருபர்களிடம் கூறிய தாவது:-
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை மீறி, ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட நிலங்களை விட கூடுதலாக நிலம் எடுக்க போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் ஆகும். 15 ஆயிரம் ஏக்கரில் விளைநிலம், காடுகளை அழித்து சாலை அமைக்க வேண்டுமா?. விவசாயத்தை அழித்து தான் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர வேண்டுமா?. ஏற்கனவே 4 வழிச்சாலை அமைத்தபோது 6 வழிச்சாலை அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
தற்போதுள்ள 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றி கொள்ள வேண்டியது தானே. 8 வழிச் சாலையால் புதிய தொழிற்சாலைகள் வரும் என்கின்றனர். ஏற்கனவே உள்ள சாலையால் எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளன. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவலை தெரிவித்து வருகிறார். எனவே இந்த திட்டத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.