ஏரியூர் அருகே நடு ஆற்றில் பழுதாகி நின்ற விசைப்படகு ½ மணி நேரம் தவித்த பயணிகள்
ஏரியூர் அருகே விசைப்படகு நடு ஆற்றில் பழுதாகி நின்றது. இதனால் அதில் சென்ற பயணிகள் ½ மணிநேரம் தவிப்புக்கு உள்ளானார்கள்.
ஏரியூர்,
ஏரியூர் அருகே உள்ள நாகமரை-பண்ணவாடி பரிசல் துறையை நம்பி நெருப்பூர், ஏரியூர், ராமகொண்ட அள்ளி, செல்லமுடி, பூச்சூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளனர். மேட்டூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வார சந்தைக்கு செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள் பரிசல்கள் வழியாக காவிரி ஆற்றின் கரைகளை கடந்து ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சென்று வருவது வழக்கம்.
இதற்காக நாகமரை-பண்ணவாடி பரிசல் துறை, ஒட்டனூர்-கோட்டையூர் பரிசல் துறையில் இயங்கும் மோட்டார் படகுகளை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்த பகுதியில் காவிரி ஆற்றில் விசைப்படகு புறப்பட்டது. இந்த விசைப்படகுடன் இணைக்கப்பட்ட பரிசலில் இருசக்கர வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டன. அந்த விசைப்படகு நடு ஆற்றில் திடீரென பழுதாகி நின்றது. இதனால் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பரிசலும் நடு ஆற்றில் நின்றது. இதனால் விசைப்படகில் இருந்தவர்கள் பீதியடைந்தனர்.
இதுபற்றி கரையோர பகுதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மற்றொரு விசைப்படகு அந்த பகுதிக்கு பரிசலுடன் கொண்டு செல்லப்பட்டது. அதற்கு மாறிய பயணிகள் ஆற்றின் மறுகரையை அடைந்தனர். ½ மணிநேரம் நடு ஆற்றில் தவித்த பயணிகள் ஆற்றின் கரையை அடைந்த பின்னர் நிம்மதி அடைந்தனர்.
இதுதொடர்பாக விசைப்படகு மற்றும் பரிசலில் சென்றவர்கள் கூறுகையில், பயணிகளை ஏற்றி செல்லும் விசைப்படகு மற்றும் பரிசல்களை முறையாக பராமரிப்பது இல்லை. பயணிகளுக்கு பாதுகாப்பு கவசமான லைப் ஜாக்கெட்டுகள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆற்றங்கரையோரங்களில் அவை பயன்பாடின்றி வைக்கப்பட்டுள்ளன. இனிமேலாவது விதிமுறைகளை முறையாக பின்பற்றி விசைப்படகு மற்றும் பரிசல்களை முறையாக பராமரிக்கவும், பயணிகளுக்கு கட்டாயமாக லைப்ஜாக்கெட் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.