கல்லாவி அருகே பஸ் மோதி மூதாட்டி சாவு உறவினர்கள் சாலைமறியல்

கல்லாவி அருகே பஸ் மோதி மூதாட்டி உயிரிழந்தார். ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-19 22:45 GMT
கல்லாவி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அம்மன்கோவில்பதி பகுதியை சேர்ந்தவர் பார்வதி (வயது 80). இவரது தம்பி சிவலிங்கம். இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை சிவலிங்கம் ஓட்டி சென்றார். மூதாட்டி பார்வதி பின்னால் அமர்ந்திருந்தார்.

கல்லாவி அருகே ஓலைப்பட்டி கூட்ரோடு என்ற இடத்தில் சென்ற போது திருவண்ணாமலையில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவலிங்கம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து அறிந்த பார்வதியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் கண்ணாடியை உடைத்தனர். மேலும் ஊத்தங்கரை-தர்மபுரி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கல்லாவி போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்