கோவையில் பிடிபட்ட விநாயகன் யானை முதுமலையில் விடப்பட்டது - ரேடியோ காலர் மூலம் தீவிர கண்காணிப்பு

கோவையில் பிடிபட்ட விநாயகன் யானை முதுமலையில் விடப்பட்டது. கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் மூலம் அந்த யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2018-12-19 22:00 GMT
மசினகுடி,

கோவை மாவட்டம் வரப்பாளையம் மற்றும் பெரியதடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 காட்டுயானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. அந்த யானைகளுக்கு விநாயகன், சின்னதம்பி என்று பெயரிட்டு பொதுமக்கள் அழைத்து வந்தனர். தனித்தனியாக சுற்றித்திரிந்த 2 யானைகளும் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. மேலும் குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கின. எனவே அந்த யானைகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கால்நடை டாக்டர்கள் ஆகியோர் இணைந்து நேற்று முன்தினம் கும்கி யானைகள் உதவியுடன் விநாயகன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன்பின்னர் பிடிபட்ட விநாயகன் யானையை, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கும்கி யானைகளின் உதவியுடன் விநாயகன் யானையை லாரியில் ஏற்றி மேட்டுப்பாளையம், கோத்தகிரி, ஊட்டி, கூடலூர் வழியாக நேற்று அதிகாலை 3 மணிக்கு முதுமலைக்கு கொண்டு வந்தனர். மேலும் கோவையில் இருந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மண்டல வனக்கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் வனத்துறை ஊழியர்களும் முதுமலைக்கு வந்திருந்தனர்.

இதனை தொடர்ந்து தெப்பகாடு வனச்சரகத்தில் உள்ள மணல் சாலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு லாரியில் இருந்து விநாயகன் யானையை கீழே இறக்கும் பணி நடந்தது. இதில் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமின் பாகன் கிருமாறன் தலைமையில் பாகன்கள் ஈடுபட்டனர். ஆனால் விநாயகன் யானை லாரியில் இருந்து இறங்க மறுத்து அடம் பிடித்தது. பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த வசிம், முதுமலை, சுஜய் ஆகிய 3 கும்கி யானைகளின் உதவியுடன் அதிகாலை 5.30 மணியளவில் லாரியில் இருந்து விநாயகன் யானை கீழே இறக்கப்பட்டது. பின்னர் அந்த யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

கழுத்தில் பொருத்தப்பட்டு உள்ள ரேடியோ காலர் மூலம் விநாயகன் யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முன்னதாக விநாயகன் யானையை முதுமலை வனப்பகுதியில் விட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் புலிகள் காப்பக துணை கள இயக்குனர் செண்பகவள்ளி தலைமையில் தெப்பகாடு வனச்சரகர் ராஜேந்திரன், கார்குடி வனச்சரகர் சிவக்குமார், முதுமலை வனச்சரகர் தயாநந்தன், விஜய் மற்றும் 30-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதற்கிடையில் விநாயகன் யானையை முதுமலை வனப்பகுதியில் விட்டதற்கு கூடலூர் மற்றும் மசினகுடி பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஏற்கனவே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள காட்டுயானைகள் பொதுமக்களை தாக்கி வரும் நிலையில், கோவையில் அட்டகாசம் செய்த விநாயகன் யானையை கொண்டுவந்து விட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்றனர்.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட விநாயகன் யானை நேற்று மதியம் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்