நிலத்தை அளக்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது வாணியம்பாடியில் பரபரப்பு
வாணியம்பாடி அருகே நிலத்தை அளக்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக (சர்வேயர்) பணிபுரிந்து வருபவர் அசோகன் (வயது 30). இவர் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் நிலத்தை அளந்து தர ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். தன்னால் இவ்வளவு பணம் தர முடியாது என கோபாலகிருஷ்ணன் கூறினார். ஆனால் அசோகன் பணம் தந்தால் மட்டுமே நிலத்தை அளக்க முடியும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அதைத்தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் அசோகனை தொடர்பு கொண்டு பணம் தயாராக உள்ளதாகவும், எங்கு வந்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
உடனே அசோகன் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் விடுதிக்கு வரும்படி கூறினார். அதன்பேரில் கோபாலகிருஷ்ணன் பணத்தை அசோகனிடம் கொடுத்த போது லஞ்சஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி ஆகியோர் கையும் களவுமாக அசோகனை பிடித்து கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக தாசில்தார் கிருஷ்ணவேணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.