பண்ருட்டி அருகே ஆசிரியையிடம் 6 பவுன் நகை பறிப்பு - 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு
பண்ருட்டி அருகே ஆசிரியையிடம் 6 பவுன் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்த ஆத்திரிக்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி தமிழ்மொழி(வயது 30). இவர் சேந்தநாட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் தினமும் பள்ளிக்கூடத்துக்கு ஸ்கூட்டியில் சென்று வருவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை 9 மணிக்கு தனது ஸ்கூட்டியில் பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தார். விசூர் சாலையில் சென்றபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி ஸ்கூட்டியை பின்தொடர்ந்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 2 வாலிபர்களும் திடீரென தமிழ்மொழி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டியை எட்டி உதைத்தனர்.
இதில் நிலைதடுமாறிய தமிழ்மொழி, ஸ்கூட்டியுடன் நடுரோட்டில் விழுந்தார். உடனே ஒரு வாலிபர், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி, தமிழ்மொழி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனிடையே கீழே விழுந்ததில் காயமடைந்த தமிழ்மொழி, திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து தமிழ்மொழியிடம் விசாரித்தனர். ஆசிரியையிடம் நகை பறித்துச்சென்ற வாலிபர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.