நாமக்கல் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-12-18 23:38 GMT
நாமக்கல்,

ராசிபுரம்

ராசிபுரம் டவுன் மேட்டுத்தெருவில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன்.வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதையொட்டி சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சாமி உற்சவருக்கு புன்னியாக வாசனம் செய்யப்பட்டு சங்கல்பம் செய்யப்பட்டது.

அதேபோல் மூலவர் திருமேனிகளுக்கும், உற்சவர் திருமேனிகளுக்கும் வெள்ளிக்கவசம் சாத்து பூஜை செய்யப்பட்டது. அதிகாலை 4.55 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் முன்பாக நம்மாழ்வார், ஆஞ்சநேயர் மூர்த்திகளுக்கு சிறப்பு சடாரி சாத்தி வாசனை திரவியங்களை கொண்டு ஆராதனம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடத்தப்பட்டது.

நம்மாழ்வார், ஆஞ்சநேயர் எதிர்கொண்டு அழைக்க பரமபதவாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன்.வரதராஜ பெருமாள் உற்சவர் வெளியே வந்தபோது, கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். பிறகு முத்தங்கி அலங்காரத்தில் காட்சி அளித்த சாமியை தரிசனம் செய்த பக்தர்கள், பரமபத வாசல் வழியாக வெளியே வந்தனர்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி அதிகாலை 2 மணி முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பி.ஆர்.சுந்தரம் எம்.பி. அவரது மனைவியுடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தார்.

இதில் ராசிபுரம், ஆர்.புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி, முருங்கப்பட்டி, சந்திரசேகரபுரம், முத்துகாளிப்பட்டி, குருக்கபுரம், காக்காவேரி, நாமகிரிப்பேட்டை, வடுகம், பட்டணம், புதுப்பட்டி உள்பட பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ராஜகோபால், தக்கார் செல்வி ஆகியோர் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கரும்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவற்றை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

ராசிபுரம் பொன்.வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஜனகல்யாண் அமைப்பினர் பக்தர்களுக்கு 50 ஆயிரம் லட்டுகள் வழங்கினர்.

இதில் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. கலந்துகொண்டு பக்தர்களுக்கு லட்டுகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஜனகல்யாண் தலைவர் பரந்தாமன், செயலாளர் ராமமூர்த்தி, தொழிலதிபர் அரங்கசாமி, வெங்கடாசலம், அரிமா சங்க முன்னாள் செயலாளர் ராகவன் உள்ளிட்டோர் லட்டுகளை வழங்கினர்.

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் மின்னக்கல் சாலையிலுள்ள வாமன நாராயணசாமி கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

இதில் வெண்ணந்தூர், மின்னக்கல், வடுகபாளையம், வெண்ணந்தூர், நாச்சிபட்டி, அலவாய்ப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. மலைக்கோவில் வளாகத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார், ஆஞ்சநேயர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆதிகேசவ பெருமாள் பரிவார தெய்வங்களுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு வெளிபிரகாரம் வழியாக பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

திருச்செங்கோடு சி.எச்.பி. காலனி மகாலட்சுமி சமேத வெங்கடேச பெருமாள் சாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள், சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். தொடர்ந்து கருடாழ்வார், ஆஞ்சநேயர் சாமிகள் வழிபாடு நடைபெற்றது. இதேபோல திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

குமாரபாளையம்

குமாரபாளையம் காட்டூர் பாண்டுரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி பரமபத சொர்க்கவாசல் திறப்பு மற்றும் சாமி அலங்காரம், மகாதீபாராதனை, சாமி திருவீதி உலா நடைபெற்றது. சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு லட்டு, கேசரி பிரசாதமாக வழங்கப்பட்டது. குமாரபாளையம் ராமர் கோவில் மண்டபத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பஜனை பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயணசாமி கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இக்கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

பள்ளிபாளையம்


பள்ளிபாளையம் காவிரி கரை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியில் வந்தார். பின்னர் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புதன்சந்தை ரோடு, ஸ்கூல் ரோடு, ஒட்டமெத்தை, பைபாஸ் ரோடு, பஸ் நிலையம் வழியாக மீண்டும் சாமி கோவிலை அடைந்தார். மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி, லட்டு, புளிசாதம், வெண்பொங்கல், தயிர்சாதம், சாம்பார்சாதம் வழங்கப்பட்டது.

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே நல்லூர் மாரியம்மன், வரதராஜ பெருமாள் மற்றும் காளியம்மன் கோவிலில் நேற்று சாமிகளுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சாமிகளை சப்பரத்தில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வந்தனர். அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா பழனியப்பன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்