கொலை வழக்கில் தேடப்பட்டவர்: போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்

பெங்களூருவில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி நேற்று போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோடினார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

Update: 2018-12-18 22:45 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி நேற்று போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோடினார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை வழக்கு

பெங்களூரு ஒசகுட்டதஹள்ளியில் கடந்த 15-ந் தேதி சென்ற சையத் ஜபிஉல்லா என்பவரை வழிமறித்த மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் பெங்களூரு ஜே.ஜே.நகரில் வசித்து வரும் வாசீம் என்ற போட்கா வாசீம்(வயது 27) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜபிஉல்லாவை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து வாசீம் மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச்சூடு

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் ஞானபாரதி போலீஸ் எல்லைக்குட்பட்ட தொட்டபஸ்தியில் வாசீம் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அங்கு இருந்த வாசீம் தப்பித்து ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்றனர். பிடிக்க முயன்ற போலீஸ்காரர் ஹரீசை அவர் ஆயுதத்தால் தாக்கினார்.

இதைப்பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரேந்திர பிரசாத் அவரை சரண் அடையும்படி கூறி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர் சரண் அடையாமல் இருந்ததோடு, பிடிக்க சென்ற போலீசாரை தாக்க முயன்றார். இதனால் பாதுகாப்பு கருதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரேந்திர பிரசாத் தனது துப்பாக்கியை எடுத்து வாசீமை நோக்கி சுட்டார். துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு வாசீமின் காலில் பாய்ந்தது.

சுருண்டு விழுந்த அவரை போலீசார் கைது செய்து விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரர் ஹரீசுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

ஏற்கனவே, 2 கொலை, 2 கொலை முயற்சி உள்பட வாசீம் மீது 8 வழக்குகள் பதிவாகி இருந்தது. இவருடைய பெயர் ஜே.ஜே.நகர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் போலீஸ்காரர் ஹரீசை தாக்கி தப்பியோட முயன்றது தொடர்பாக வாசீம் மீது ஞானபாரதி போலீசில் நேற்று இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நேற்று பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்