ஜோலார்பேட்டை அருகே ரெயில்வே கேட் பழுதடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

ஜோலார்பேட்டை அருகே ரெயில்வே கேட் பழுதடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.;

Update: 2018-12-18 22:45 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ரெயில் நிலையம் தான். இந்த ரெயில் நிலையம் அருகில் பார்சம்பேட்டை என்ற இடத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இவ்வழியாகதான் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி பகுதிக்கு செல்ல வேண்டும். ரெயில் நிலையம், அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம், மின்சார அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகளுக்கு இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருச்சக்கர வாகனங்கள், கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ரெயில் வருவதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது. ரெயில் சென்ற பிறகு மீண்டும் கேட்டை திறக்க முயன்றபோது, லாக் உடைந்தது. அதனால் கேட் திறக்க முடியாமல் போனது. உடனடியாக ஊழியர்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் கேட்டை சரி செய்வதற்கு யாரும் வரவில்லை. நேற்று காலை தான் பழுதான கேட்டை சரி செய்ய வந்தனர். அதனை சரி செய்ய பகல் 1 மணி ஆகிவிட்டது. சுமார் 17 மணி நேரத்திற்கு பிறகு ரெயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. வழக்கம்போல் மாணவர்கள் கேட் வழியாக வந்தனர். அங்கு கேட் மூடி இருந்ததால் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றி பள்ளிக்கு காலதாமதமாக சென்றனர்.

திருப்பத்தூர் சர்க்கரை ஆலைக்கு செல்லும் லாரிகள் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் வழியாக சென்றது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிபட்டனர்.

மேலும் செய்திகள்