பள்ளி குழந்தைகளுக்கான, இலவச சைக்கிள் திட்டத்தை ரத்து செய்யவில்லை குமாரசாமி தகவல்

பள்ளி குழந்தைகளுக்கான இலவச சைக்கிள் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்று சட்ட சபையில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Update: 2018-12-18 22:45 GMT
பெலகாவி, 

பள்ளி குழந்தைகளுக்கான இலவச சைக்கிள் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்று சட்ட சபையில் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

ரத்து செய்யவில்லை

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட சிலர் கேட்ட கேள்விக்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-

பள்ளி குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யவில்லை. சைக்கிள்கள் தரம் இல்லை என்று புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அந்த சைக்கிள் வழங்குவதை ரத்து செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். ஆனால் அந்த திட்டத்தை ரத்து செய்யவில்லை.

பள்ளிகளை சீரமைக்க...

அரசு பள்ளிகளில் ரூ.1,200 கோடியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை சீரமைக்கவும், மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உள்ள பள்ளிகளை சீரமைக்கவும் முன்னுரிமை அளித்துள்ளேன்.

குழந்தைகளை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் ஆயிரம் பள்ளிகளில் ஆங்கில மொழி பாடத்தை கற்பிக்க உத்தரவிட்டுள்ளேன். எல்லை பகுதிகளில் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்களின் பிரச்சினைகள்

அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும். பள்ளி கல்வித்துறையில் புதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்