நெல்லை ராமையன்பட்டியில் 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்
நெல்லை ராமையன்பட்டியில் நேற்று 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை ராமையன்பட்டியில் நேற்று 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதாள சாக்கடை
நெல்லை ராமையன்பட்டியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கு மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அந்த பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில், கழிவு நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கழிவுகளாக அருகில் உள்ள கால்வாய் மூலம் குளத்துக்கு திறந்து விடுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதைக் கண்டித்து ராமையன்பட்டி கிராம மக்கள் நேற்று முன்தினம் ராமையன்பட்டி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய தொடர்ந்தது.
2-வது நாளாக...
இந்த நிலையில் நேற்று 2- வது நாளாகவும் கிராம மக்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பஞ்சாயத்து அலுவலகம் வளாகத்தில் உள்ள சமுதாய நலக்கூடம் முன்பு ஆண்களும், பெண்களும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரிக்காமல் குளத்தில் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.