வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நெல்லை மாவட்ட கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை,
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நெல்லை மாவட்ட கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சங்கரன்கோவில்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு பள்ளிகொண்ட பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. கோவிலின் உள்பிரகாரத்தில் வீதி உலா நடந்தது. நேற்று காலை 8.10 மணி அளவில் கோவில் பிரகாரத்தின் வடக்கு பகுதியில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளிகொண்ட பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் மீண்டும் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு சயனசேவை, திருமஞ்சனம், கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இதேபோல் நரசிம்மர் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு உற்சவருக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடந்தது. மாலை 6 மணிக்கு கோவிலின் வெளிபிரகாரத்தில் தெப்பக்குளத்தை சுற்றி 1,008 தீபம் ஏற்றியும், பெருமாள் சப்பரத்தில் வீதி உலா வருதலும் நடந்தது.
அம்பை-சேரன்மாதேவி
அம்பை அருகே உள்ள மன்னார்கோவில் ராஜகோபால குலசேகர ஆழ்வார் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை முதல் மதியம் வரை சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு குலசேகர ஆழ்வாருக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், தொடர்ந்து ராஜகோபால சுவாமி ஆண்டாள் கருட ஆழ்வார் சேஷ வாகனத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
இதேபோல் கல்லிடைக்குறிச்சி ஆதிவராக பெருமாள் கோவில், அம்பை கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சேரன்மாதேவி அருகே உள்ள அத்தாளநல்லூர் ஆதிமூல கஜேந்திரவரதர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜையும், பெருமாள் சயன கோலத்தில் எழுந்தருளல் மற்றும் மாலையில் திருமஞ்சனம், சுவாமி சொர்க்கவாசல் வழியாக புறப்பட்டு வருதல், வீதி உலா வருதல் நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்-தென்காசி
வாசுதேவநல்லூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தென்காசி யானைப்பாலம் அருகில் உள்ள பொருந்தி நின்ற பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள், தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வரதராஜபெருமாள் தேவியர்களுடன் சயன கோலத்தில் காட்சி அளித்தார். மாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.