நீலகிரி மாவட்டத்தில், பாலியஸ்டர், நைலான் பைகளை பயன்படுத்த தடை - 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது

நீலகிரி மாவட்டத்தில் பாலியஸ்டர், நைலான் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2018-12-18 22:00 GMT
ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அதன் அழகை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், உறிஞ்சு குழல், கையுறைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், காகித கப்புகள், லேமினேஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள் உள்பட மொத்தம் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதனை மீறி பயன்படுத்துவது சோதனையில் தெரியவந்தால், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, மேலும் கூடுதலாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டு, மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது நீலகிரியில் பாலியஸ்டர், நைலான் பைகள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளின் நலன் கருதி பாலியஸ்டர் மற்றும் நைலான் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் தடிமனான பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்யப்பட்டு, பேக்கிங் செய்த தேதி, அப்பொருள் காலாவதியாகும் தேதி ஆகியவை அச்சிடப்பட்டு வரும் இனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால், அதனை விடுத்து நீலகிரி மாவட்டத்தில்பொருட் களை சில்லறை விற்பனை செய்ய பேக்கிங் செய்யப்படும் பிளாஸ்டிக் கவர்கள் 51 மைக்ரான் மட்டுமல்லாமல், எவ்வளவு தடிமனாக இருந்தாலும் தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட பைகளை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் இருந்து, அதனை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப் படும்.

இந்த தடையானது வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, நீலகிரியில் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாலியஸ்டர் மற்றும் நைலான் பைகளை பயன்படுத்தாமல், துணிப்பைகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் நீலகிரியில் 21 வகையான பிளாஸ்டிக்பொருட் களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்