மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் நடைபாதை அமைக்கப்படும் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் நடைபாதை அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2018-12-18 23:00 GMT
திருவொற்றியூர்,

சென்னை ராயபுரத்தில் உள்ள புனித பீட்டர் மேல் நிலைப்பள்ளியில் மத்திய அரசு நிறுவனமான சி.பி.சி.எல் மற்றும் தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

விரைவில் நடைபாதை

சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பில் 520 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கியுள்ளது. மேலும் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் நடைபாதை அமைக்கப்படும்.

தேர்தல் கூட்டணி அமைக்க இது உரிய நேரம் அல்ல. கூட்டணி குறித்து கட்சியின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார்கள். தமிழகத்தில் தாமரை மலரும் என்று தமிழிசை கூறி வருகிறார். அவர்களுக்கு ஒரு பேரார்வம் இருக்கிறது. மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை என்றும் இரட்டை இலை தான். மற்றவர்களுக்கு இடம் இல்லை. குட்கா ஊழல் வழக்கில் குற்றவாளியை தண்டிக்க வேண்டியது கோர்ட்டு தான். சம்மன் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அது பெரிய விஷயம் அல்ல.

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு மின்சாரத்தை சென்னை மாநகராட்சி பகுதியில் இருந்து எடுத்துள்ளனர். அதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மகேஸ்வரி, சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம். சி.பி.சி.எல் நிர்வாக இயக்குநர் எஸ்.என்.பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்,.

மேலும் செய்திகள்