முத்துப்பேட்டை அருகே புயல் நிவாரண பெட்டகம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

முத்துப்பேட்டை அருகே புயல் நிவாரண பெட்டகம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-18 22:45 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் கிராமம் கஜா புயலால் சூறையாடப்பட்டது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும் பாலானவர்களுக்கு அரசின் நிவாரண பெட்டகம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் புயல் சேத விவரங்களை முறையாக கணக்கெடுத்து, நிவாரண பெட்டகத்தை வழங்காத அதிகாரிகளை கண்டித்தும், நிவாரண பெட்டகத்தை உடனடியாக வழங்கக்கோரியும் உப்பூரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது கிராம மக்கள் சாலையின் குறுக்கே சமையல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் கிராம மக்கள், புயல் நிவாரண பெட்டகத்தை வழங்காத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்