8-ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள், கல்வெட்டுகள் கண்டெடுப்பு தஞ்சை வரலாற்று ஆய்வாளர் தகவல்

வேலூர் அருகே உள்ள நவ்லாக்புளியங்கண்ணூரில் கி.பி. 8-ம் நூற்றாண்டு சிற்பங்கள், கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக தஞ்சை வரலாற்று ஆய்வாளர் கூறினார்.

Update: 2018-12-18 23:00 GMT
தஞ்சாவூர்,

வேலூர் மாவட்டத்தில் பாலாரும், தென்பெண்ணை ஆறும் கலக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், ஆற்காட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நவ்லாக்புளியங்கண்ணூர். இந்த ஊரில் கி.பி. 8 முதல் 9-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிற்பங்கள் புதையுண்டு இருந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனை அந்த ஊரை சேர்ந்த கவுதம் என்பவர் தஞ்சை சரசுவதி மகால் நூலக தமிழ் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், தஞ்சை தொல்லியல் துறை ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “தமிழக அரசின் வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வித்து பண்ணை வளாகத்தின் அருகில் ஒரு சிறிய கொட்டகையில் கோவில் அமைத்து அந்த ஊர் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பழமையான லிங்கமும், தலை உடைந்த நிலையில் தேவியின் சிற்பம், தலை உடைந்த நிலையில் சப்தமாதர்களுள் ஒன்றிரண்டு சிறப்பங்களும் கோவிலில் காணப்படுகின்றன. இந்த கோவிலில் இருந்து சில மீட்டர் தொலைவில் உயர்ந்த வகை கல்லால் வடிக்கப்பெற்ற விஷ்ணு மற்றும் 2 தேவியர்களின் சிறப்பங்களும் தலை உடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

3½ அடி உயரத்தில் உள்ள இந்த சிற்பங்களின் அழகு காண்போரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் இருந்து இந்த பகுதியில் பெரிய சிவன் கோவிலும், விஷ்ணு கோவிலும் இருந்துள்ளதை அறிய முடிகிறது. மேலும் பாலாற்றில் வற்றாத சிறு ஓடையாக கசம் என்ற பெயரில் ஒரு கால்வாய் அந்த பகுதியில் ஓடுகிறது. அந்த கால்வாயினுள் சோழர் காலத்தை சேர்ந்த கற்கள் நிறைய கிடப்பதை காண முடிகிறது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட உடைந்த துண்டான கல்வெட்டு 8 முதல் 9-ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். கல்வெட்டு முழுமையாக கிடைக்கவில்லை. கிடைத்துள்ள உடைந்த கல்வெட்டில் காணப்படும் சொற்களை கொண்டு கோவிலுக்கு விளக்கெரிக்க ஆடுகளை பிரம்மராஜன் என்பவர் தானம் அளித்த செய்தியை அறிய முடிகிறது.

கிட்டத்தட்ட 1 கி.மீ. தொலைவு கசம் கல்வாயின் இருபுறமும் உடைந்த நிலையில் சிற்பங்களும், கோவில் கட்டுமானங்களும் சிதைந்து கிடக்கின்றன. தலை உடைக்கப்பட்ட நிலையில் உள்ள சிறப்பங்களை பார்க்கும்போது அவை மாற்றார் படையெடுப்பால் உடைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் இங்கு இருந்த மிகப்பரிய கோவில் முழுவதும் சிதைந்து போய் இருக்கலாம் என்பதையும் அறிய முடிகிறது.

சில மீட்டர் தொலைவில் உள்ள பாலாற்றில் ஒரு காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த கோவில் அழிந்திருக்கலாம் என்றும் கண்டறிய முடிந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் அந்த ஊர் பெரியவர்கள் தாம் இப்போது குடியிருக்கும் பகுதி பிற்காலத்தில் உருவாக்கப்பெற்றது என்று கூறினர். இந்த ஊரில் அகழாய்வு மேற்கொண்டால் இன்னும் பல வரலாற்று சின்னங்கள் கிடைக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்