குன்றத்தூர் ஒன்றியத்தில் மத்திய குழு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு

குன்றத்தூர் ஒன்றியத்தில் மத்திய குழு அதிகாரிகளுடன் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-12-18 22:30 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள வட்டம்பாக்கம், செரப்பனஞ்சேரி, வளையக்கரனை, கரசங்கால் ஆகிய ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

இங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழு அலுவலர்களுடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

இதில் செரப்பனஞ்சேரி, ஊரிஞ்சிக்குழி, வளையக்கரனை ஊராட்சிகளில் சாலையோரம் மரக்கன்று நடுதல், வட்டம்பாக்கம் ஊராட்சியில் கால்நடை குடிநீர் தொட்டி, குளம் மேம்பாடு மற்றும் 14-வது நீதிக்குழு மானியத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்தல் போன்ற பணிகளை பார்வையிட்டார். இதனையடுத்து கரசங்கால் ஊராட்சிக்கு வருகை தந்த மத்திய குழு அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டனர்.

அங்குள்ள நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்ட இடம், நொச்சி கன்றுகள் உற்பத்தி செய்தல், மண்புழு இயற்கை உரம் தாயரித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கிய உரமாக்க தகுந்த பொருட்கள் மறுசுழற்சி செய்யவேண்டிய பொருட்கள், உரக்குழி அமைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்தல் மற்றும் மரம் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டனர். வளர்ச்சி திட்டம் மற்றும் பணிகள் குறித்தும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அவர்களுக்கு விளக்கி கூறினார்.

இதனை தொடர்ந்து மத்திய குழுவினர் அங்கு பணிபுரியும் பணிதள பொறுப்பாளர்கள், தூய்மை காவலர்களின் மாத ஊதியம், பணியாளர்களின் வருகை பதிவேடு, அடையாள அட்டை போன்றவற்றை பார்வையிட்டு அவர்களின் வாழ்வாதாரங்களை கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் கவிதா, உதவி செயற்பொறியாளர் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, பாஸ்கரன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் சுப்புராஜ், வசுமதி, கரசங்கால் ஊராட்சி செயலர் நாசர் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், பணிதள பொறுப்பாளர்கள், தூய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்