ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

Update: 2018-12-18 22:15 GMT
ஊட்டி, 

படுகர் இன மக்கள் ‘அட்டி’ என்று அழைக்கப்படும் கிராமங்களில் வசித்து வருகிறார்கள். படுக இன மக்களின் குல தெய்வமாக ஹெத்தையம்மன் உள்ளது. படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்க உள்ளது.

இதையொட்டி வருகிற 26-ந் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 26-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், நீலகிரியில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்