நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகனுடன் தீக்குளிக்க முயன்ற தாய் - சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-17 22:00 GMT
சேலம், 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இநத கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அப்போது சேலம் கோரிமேடு அருகே உள்ள கவுரிபுரம் பகுதியை சேர்ந்த அலமேலு (வயது 73) தனது மகன் முத்துவுடன் (51) கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு திடீரென அவர்கள் தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவர்கள் கூறும்போது, ‘தங்களுக்கு சொந்தமான நிலத்தை பாகம் பிரித்து தருவதாக கூறி உறவினர் ஒருவர் அபகரித்து விட்டார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து பலமுறை கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தோம்’ என தெரிவித்தனர்.

இதையடுத்து நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அலமேலு தனது மகனுடன் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தார்.

மேலும் செய்திகள்