மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 6 கிராம மக்கள் மனு
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக் டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில் நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தின்போது, 15 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மனு அளிப்பதற்காக கடமலை- மயிலை ஒன்றியத்தில் உள்ள அரசரடி, பொம்மராஜபுரம், மஞ்சனூத்து, கூடம்பாறை, புலிக்காடு, நொச்சியோடை ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாங்கள் அரசரடி, பொம்மராஜபுரம், மஞ்சனூத்து, கூடம்பாறை, புலிக்காடு, நொச்சியோடை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 60 ஆண்டுகளாக குடியிருந்து விவசாயம் செய்தும், பிழைப்பு நடத்தியும் வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டுக்கோ, விவசாயம் செய்யும் நிலத்துக்கோ பட்டா எதுவும் இல்லை. எங்களுக்கு சாலை வசதியோ, மின்சார வசதியோ எதுவும் இல்லை.
இதுதொடர்பாக நாங்கள் பலமுறை கலெக்டர் அலுவலகத்திலும், அரசியல் கட்சி தலைவர்களிடமும் மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் விவசாயம் செய்து வரும் பொருட் களை சந்தைக்கு எடுத்துச் செல்ல விடாமல் வனத்துறையினர் தடுத்து நிறுத்தி இன்னும் ஒரு மாத காலத்துக்குள் எங்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், ‘டி.சுப்புலாபுரம் கிராமத்தில் அரசு மதுபானக்கடையும், மதுபான பாரும் அமைந்து உள்ளது. இங்கு டி.சுப்புலாபுரம், பொம்மிநாயக்கன்பட்டி, பிள்ளைமுகம்பட்டி, மல்லையாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆண்கள் வந்து மதுகுடித்து விட்டு, விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த மதுக்கடையை அகற்றக்கோரி ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்தோம். சில நாட்களுக்கு முன்பு மதுக்கடை அருகில் போராட்டம் நடத்தினோம். ஆனாலும், கடை அகற்றப்படவில்லை. இந்நிலையில் மதுபான பார் உரிமையாளர், எதிர்ப்பு தெரிவித்த பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். எனவே, கடையை அகற்றவும், மிரட்டிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேவதானப்பட்டி அருகில் உள்ள அட்டணம்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் எல்லா சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். மெயின்ரோட்டுக்கு அருகில் டி.வி. நகர் அமைந்துள்ளது. எங்கள் கிராமத்தில் யாராவது இறந்தால் அரசு ஓடை புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்வது வழக் கம். டி.வி.நகரில் உள்ளவர்கள் இறந்தால் அவர்களுக்கு மெயின்ரோட்டில் மயானம் உள்ளது. இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. தற்போது டி.வி.நகரில் சிலர் வேண்டும் என்றே எங்கள் பகுதியில் உள்ள இடத்தில் மயானம் வேண்டும் என்று கூறி அதற் கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதனால் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை நுட்புனர் என்ற படிப்பை படித்து பயிற்சி பெற்ற பெண்கள் சிலர் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘முறையாக படித்து பயிற்சி பெற்ற எங்களை போன்ற பணி அனுபவமுள்ளவர்களை அரசு மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணி நியமனம் செய்ய வேண்டும். இதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை நுட்புனர் பணியிடம் உருவாக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
கம்பம் டி.டி.வி.தினகரன் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘நாங்கள் வாழும் குடியிருப்பு அருகில் நகராட்சி பழைய குப்பைக் கிடங்கு உள்ளது. புதிய குப்பைக் கிடங்கு கூடலூர் சாலையில் உள்ளது. எங்கள் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக அனைத்து இடங்களிலும் சேகரிக்கப்பட்ட திடக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டி உரம் தயாரிப்பதற்காக கட்டிட வேலைகள் தொடங்க உள்ளது. ஏற்கனவே நவீன எரியூட்டு மயானம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து வெளியேறும் புகையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
பா.ம.க. மாவட்ட செயலாளர் சேட் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘காட்டுநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குளம் தூர்வாரப்படாமல் கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே குளத்தை தூர்வாரி, கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.