அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-12-17 21:40 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 5 மற்றும் 6-வது வார்டு பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தலைமையில் நேற்றுகாலை அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலக வளாகத்தில் திரண்டனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் முன்பகுதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், உயர்த்திய சொத்து வரியை ரத்து செய்யவும், வாரத்திற்கு 2 முறை குடிநீர் வழங்க வேண்டும் என்றும், 6-வது வார்டுக்குட்பட்ட பெரியார்காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீரை ஏற்றி மக்கள் பயன்பாட்டிற்கு வினியோகம் செய்ய வேண்டும் என்றும், அந்த பகுதியில் தேங்கி உள்ள குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளை அகற்றவும், பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சரி செய்ய கோரியும், தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 5-வது வார்டுக்குட்பட்ட காந்தி ரோடு பகுதியில் பழுதடைந்துள்ள சாக்கடை கால்வாயை அகற்றி விட்டு புதிய கால்வாய் அமைக்கவும், பல்வேறு பகுதிகளில் மலைபோல் தேங்கி உள்ள குப்பைகளை அகற்றவேண்டும்.

சவுபாக்யா நகரில் உள்ள கழிவுநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்றும், கோகுலம் காலனி பகுதியில் மின்கம்பம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் டெங்கு, பன்றி காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச்சல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். பின்னர் இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்