கோவை வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு - போலீசார் தீவிர விசாரணை
கோவை வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல் வீசப்பட்டது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. கோவை மாநகர பகுதியில் குடியிருப்பு அருகே தண்டவாளம் உள்ளதால், அடிக்கடி ரெயில் மீது கல் வீசும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கரை அருகே ஓடும் ரெயிலில் கல் வீசப்பட்டது. இதில் பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்தனர். அத்துடன் போலீசார் அடிக்கடி ரோந்தும் சென்றனர். இதனால் கல்வீச்சு சம்பவம் நடைபெற வில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2.50 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து கோவைக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரெயில், இரவு 9.10 மணிக்கு இருகூர்-சிங்காநல்லூர் ரெயில் நிலையத்துக்கு இடையே வந்து கொண்டு இருந்தது.
அப்போது மர்ம நபர்கள் அந்த ரெயில் மீது கல் வீசினார்கள். இதில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியான டி-2, டி-3, டி-4 ஆகிய 3 பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து பயணிகள் கூறும்போது, ‘கோவையில் உள்ள ரத்தினபுரியில் இருந்து இருகூர் வரை உள்ள பகுதியில் அடிக்கடி ரெயில்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்து வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாட்டாக வீசுகிறார்கள். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்’ என்றனர்.