14 பேர் பலி எதிரொலி: கர்நாடகத்தில், கோவில்களில் பிரசாதம் வழங்க தடை இந்து அறநிலையத்துறை உத்தரவு

கோவில் பிரசாதம் சாப்பிட்டு 14 பேர் பலியானதன் எதிரொலியாக கர்நாடகத்தில் உள்ள கோவில்களில் பிரசாதம் என்ற பெயரில் பக்தர்களுக்கு உணவு வழங்க தடை விதித்து இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-17 22:00 GMT
பெங்களூரு,

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் உள்ள மாரம்மா கோவிலில் கடந்த வாரம் கோபுரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் என்ற பெயரில் உணவு வழங்கப்பட்டது. அதை 100-க்கும் மேற்பட்டவர்கள் வாங்கி சாப்பிட்டனர்.

அந்த பிரசாதம் சாப்பிட்ட அனைவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மைசூருவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக அரசின் இந்து அறநிலையத்துறை, கோவில்களில் பிரசாதம் என்ற பெயரில் உணவு வழங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரசாதம் என்ற பெயரில் பக்தர்களுக்கு உணவு வழங்கக்கூடாது. பிரசாதமாக லட்டு மட்டுமே வழங்க வேண்டும்.

உள்ளூர் போலீசார் அந்த கோவில்களுக்கு சென்று, பிரசாதம் நிபந்தனைகளின்படி வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். கோவில்களில் சிறப்பு பூஜைகளின்போது, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

கோவில்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். கோவில்களில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பிரசாதத்தை சோதனை செய்த பின்னரே பக்தர்களுக்கு கொடுக்க வேண்டும். கோவில் நிர்வாகங்கள், இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்