அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பு ஜனவரி மாதம் தொடங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
காஞ்சீபுரம்,
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று காலை கார் மூலம் சென்னையில் இருந்து காஞ்சீபுரம் வந்தார். அவரை காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சீ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் கோவில் பிரசாதங்கள் வழங்கி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
சங்கராச்சாரியாருடன் சந்திப்பு
அங்கிருந்து காஞ்சீ சங்கரமடம் சென்ற அவர், சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். சங்கரமடத்தில் முக்தியடைந்த மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள், ஜெயேந்திரர் ஆகியோரது பிருந்தாவனத்துக்கும் சென்று வணங்கினார்.
அதைதொடர்ந்து காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையன், அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:-
விலையில்லா சைக்கிள்
முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவதன் மூலம் அனைத்து துறைகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது. கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கை, நடந்த நிவாரண பணிகள் பாராட்டும்படி இருந்தன.
தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.
எல்.கே.ஜி. வகுப்பு
அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி ஆசை இதன் மூலம் நிறைவேறும்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.