பிரபல நிறுவனம் பெயரில் போலி லேபிள் ஒட்டி பீடி விற்றவர் கைது
பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள் ஒட்டி பீடி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்,
கோவையில் தனியாருக்கு சொந்தமான பிரபல பீடி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் மேலாளராக கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முஜீப்ரகுமான் என்பவர் உள்ளார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் இந்த நிறுவனத்தின் பீடி விற்பனை குறைந்து வந்தது. இதைத்தொடர்ந்து முஜீப்ரகுமான் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் கோபி பகுதி முகவர்கள் 2 பேரிடம் இதனை கண்காணிக்குமாறு கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர்கள் நேற்று காலை கோபி யாகூப் வீதியில் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே ஒருவர் பையில் பீடி பண்டல்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த 2 பேரும் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.
அதில் உள்ள பீடி பண்டல்களில் தங்கள் நிறுவன பெயரில் போலியாக லேபிள் ஒட்டியிருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவரை பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த முகமது ரபீக் (வயது 27) என்பதும், இவர் வெளியூரில் இருந்து பீடிகள் வாங்கி வந்து பிரபல கோவை நிறுவனம் பெயரில் போலி லேபிளை ஒட்டி விற்று வந்ததும் தெரிய வந்தது. திருப்பூரில் தங்கியிருந்து கோபிக்கு பீடி பண்டல்களை கொண்டு வந்து விற்பனை செய்ததாக விசாரணையின்போது அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ரபீக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து முகமது ரபீக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.