கோத்தகிரியில் அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன

கோத்தகிரியில் அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

Update: 2018-12-17 22:00 GMT
கோத்தகிரி,


நீலகிரி மாவட்டத்தில் 233 பகுதிகள் பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதி வரை பெய்யக்கூடும் என்பதால் இயற்கை பேரிடர்களை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை அதிகாரிகளை கொண்ட முதன்மை பேரிடர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கோத்தகிரியில் மழைக்காலங்களில் மண் சரிவு, சாலை துண்டிப்பு ஆகியவை ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம், தடுப்பு சுவர்கள் அமைத்தல், மழைநீர் கால்வாய்களில் அடைப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இது தவிர 1000 மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு, கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் வளர்ந்துள்ள அபாயகரமான கற்பூர மற்றும் சீகை மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து வருவாய்த்துறை, வனத்துறையினரின் முறையான அனுமதி பெற்று அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவ வருகிறது.

கோத்தகிரியில் இருந்து கட்டபெட்டு செல்லும் சாலை, கோடநாடு செல்லும் சாலை, கார்சிலி செல்லும் சாலையோரங்களில் வளர்ந்துள்ள அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.

இந்த பணியில் கோட்ட பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் பாலமுரளி, ஆய்வாளர் ஜெயக்குமார்ஆகியோர் மேற்பார்வையில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்