பிரசாதம் சாப்பிட்டு 14 பேர் பலி எதிரொலி: பிரச்சினைக்குரிய மாரம்மா கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்றது மாவட்ட கலெக்டர் காவேரி பேட்டி

பிரசாதம் சாப்பிட்டு 14 பேர் பலியானதன் எதிரொலியாக பிரச்சினைக்குரிய மாரம்மா கோவில் நிர்வாகத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது என்று மாவட்ட கலெக்டர் காவேரி கூறினார்.

Update: 2018-12-17 21:45 GMT
கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபுரத்தின் மீது கலசங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து பக்தர்களுக்கு தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் பிரசாதம் சாப்பிட்ட 14 பக்தர்கள் பலியானார்கள். 90-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மைசூருவில் உள்ள கே.ஆர். அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஹனூர் போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கோவிலை நிர்வகிப்பதில் இருகோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே இச்சம்பவம் நடந்திருக்கிறது என்றும், மேலும் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் சுலவாடி கிராம மக்களிடம் விசாரணை நடத்தியதில் கோவிலை நிர்வகிப்பதில் இருகோஷ்டிகளுக்கு இடையே மோதல் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சுலவாடி கிராம மக்கள் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் மாரம்மா கோவிலுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு, அதனால் மாரம்மா கோவிலை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும். அப்படி நடந்தால் இனிமேல் எந்த பிரச்சினையும் வராது என்று கூறி உள்ளனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாரம்மா கோவிலை மாநில அரசு ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் காவேரி சுலவாடி கிராமத்திற்கு சென்றார். அவர் மாரம்மா கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து அவர் கிராம மக்களிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

அப்போது கிராம மக்கள், பிரச்சினைக்குரிய மாரம்மா கோவிலை மாநில அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கலெக்டர் காவேரியிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர் கோவில் நிர்வாகத்தை மாநில அரசு ஏற்றுவிட்டது என்று அவர்களிடம் கூறினார்.

இதையடுத்து தனது அலுவலகத்துக்கு திரும்பிய கலெக்டர் காவேரி, மாரம்மா கோவிலை இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டி மாநில அரசுக்கு கடிதம் எழுதினார். இதுபற்றி அறிந்த கோவில் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர், மாரம்மா கோவில் மாநில அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு விட்டது. இன்னும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்தான் கொண்டு வர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்று அவர் கூறினார்.

பின்னர் அவர், தான் எழுதிய கடிதத்தை உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார். பிரச்சினைக்குரிய மாரம்மா கோவில் நிர்வாகத்தை மாநில அரசு ஏற்றதால் சுலவாடி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்