ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு பேரணி
சென்னையில் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேசிய பேச்சு மற்றும் செவித்திறன் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மருத்துவ மாணவர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது டாக்டர் ஜெயந்தி பேசியதாவது:-
இந்தியாவில் 50 லட்சம் பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்களாகவும், 19 லட்சம் பேர் பேச்சுத்திறன் குறைபாடு உடையவர்களாவும் உள்ளனர். பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு 3-வது நாளில் செவிப்புலன் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் செவித்திறன் குறைபாடு மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் திறனை மேம்படுத்த அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.