சங்கரன்கோவில் கோர்ட்டு வளாகத்தில் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

சங்கரன்கோவில் கோர்ட்டு வளாகத்தில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-12-17 22:00 GMT

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை ஊரைச் சேர்ந்த சித்திரபுத்திரபாண்டியன் என்பவருடைய மகன் தங்கத்துரை (வயது 39). தொழிலாளி. இவரது வீட்டில் குடும்ப தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று சங்கரன்கோவில் கோர்ட்டு வளாகத்தில் தங்கத்துரை வந்து நின்றார். அங்கு திடீரென தான் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார். அப்போது அங்கு நின்ற போலீசார் உடனடியாக அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதும், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தங்கத்துரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர்ட்டு வளாகத்தில் தொழிலாளி ஒருவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்