பணகுடி அருகே மர்ம சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலனை ஏவி தொழிலாளியை கொன்ற மனைவி போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

பணகுடி அருகே செங்கல்சூளை தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலனை ஏவி மனைவியே அவரை கொலை செய்த பரபரப்பு தகவல் வெளியானது.

Update: 2018-12-17 23:00 GMT
பணகுடி,

நெல்லை மாவட்டம் பணகுடி அழகியநம்பிபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 48). இவர் பணகுடியில் உள்ள ஒரு செங்கல்சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று செங்கல்கள் வேகவைக்க தீ போடுவதற்கு சென்ற அவர், அங்கு தலையில் ரத்தகாயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் குருசாமி உடலை வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டனர். இதனை அறிந்த பணகுடி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் குருசாமியை அவருடைய மனைவி ஜெயந்தியும், அவருடைய கள்ளக்காதலன் பணகுடி சமாதானபுரத்தை சேர்ந்த செல்வின் (28) என்பவரும் சேர்ந்து கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

குருசாமி வேலை பார்க்கும் செங்கல் சூளை அருகே செங்கல் சூளை நடத்தி வருபவர் செல்வின். இவருக்கும், ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டாக 2 பேரும் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளனர். மேலும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து உள்ளனர். இதுகுறித்து அறிந்த குருசாமி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது மனைவி ஜெயந்தியை கண்டித்துள்ளார். இதை ஜெயந்தி, செல்வினிடம் கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து குருசாமியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்.

கடந்த 14-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு குருசாமி டீ குடித்து விட்டு செங்கல்சூளைக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த செல்வின் மரக்கட்டையால் குருசாமியின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் ஜெயந்தி, செல்வின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் பணகுடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்