வாரச்சந்தை விதிமுறைகளை மீறி நாசரேத்தில் சாலையில் கடை அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

நாசரேத்தில் வாரச்சந்தை விதிமுறைகளை மீறி சாலையின் இருபுறமும் கடைகளை அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2018-12-17 23:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது, கயத்தாறு தாலுகா ஓனமாக்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:- எங்கள் ஊரில் அனைத்து சமுதாயத்தினரும் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 35 ஆண்டுகள் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து விட்டது. இதனால் கடந்த ஆண்டு அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. அந்த கட்டிடத்தின் சுற்றுசுவர் அருகே உள்ள சிறிய கட்டிடத்தில் தற்போது பள்ளி இயங்கி வருகிறது.இந்த நிலையில், இடிக்கப்பட்டு காலி இடத்தை ஒரு சமுதாய மக்கள் தங்களுக்கு சொந்தமானது என கூறி வருகின்றனர். இதனால், அந்த இடத்தில் பள்ளி கட்டிடம் கட்ட முடியாத சூழல் ஏற்படுகிறது. தற்போது பள்ளிக்கூடம் கட்டப்படவில்லை என்றால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே அதே இடத்தில் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர்.

முன்னதாக இந்த கிராம மக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகபழனிச்செல்வம் மற்றும் கட்சியினர் பலர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சங்கு ஊதி, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், ‘குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகள் தேவேந்திரகுல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவாகும். இந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்ய அரசு ஆணை வெளியிட வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா கொடுத்த மனுவில், மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோவில்களில் ஆண்டு தோறும் அய்யப்ப பக்தர்கள் சார்பில் மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு நடத்தக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் எந்த தடையும் இல்லாமல் கோவில்களில் மண்டல பூஜை நடத்த அனுமதி வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் தலைவர் செல்வம் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:- நாசரேத் நகரப்பஞ்சாயத்து மூலம் வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது. இந்தவார சந்தை கட்டிடத்துக்குள் மட்டும் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் தற்போது சந்தைக்கு வெளியே நாசரேத்-சாத்தான்குளம் சாலையின் இருபுறமும் கடைகள் அமைத்து வியாபாரம் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் சந்தை செயல்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சந்தை ஏலத்தை ரத்து செய்து மீண்டும் ஏலம் விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தின் முகப்பில் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. எனவே இந்த பஸ்நிலையத்தின் கட்டுமான ஒப்பந்தக்காரர் மீதும், கட்டுமான பணிகளை மேற்பார்வையிட்டு சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அகமது இக்பால் கொடுத்த மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொல். திருமாவளவன் மீது காழ்ப்புணர்ச்சியுடன் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியுள்ளார். எனவே அவர் மீது எஸ்.சி.எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

தருவைகுளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அமலதாசன் என்ற பழம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள பஸ் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் இதுவரை பூட்டப்பட்டு கிடக்கிறது. அந்த சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறி இருந்தார்.

மேலும் செய்திகள்