மோட்டார் சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதல் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு
ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிளும், சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் இறந்தார்.;
ராசிபுரம்,
ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் ஆயிபாளையம் ஆலாம்பட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் துரைசாமி. (வயது 70). இவர் அரசு கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ராசிபுரம் அருகேயுள்ள பவர்ஹவுஸ் அருகில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவர் ராசிபுரம்-திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அவரது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது ராசிபுரத்தில் இருந்து ஆண்டகளூர்கேட்டை நோக்கிச் சென்ற ஒரு சரக்கு ஆட்டோ, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் துரைசாமி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
இதுபற்றி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு ஆட்டோ டிரைவர் ராசிபுரம் அன்னமாரப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுரிசங்கர் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.