பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மனு

பொது இடத்தில் மது குடித்தவர்களை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2018-12-17 22:30 GMT
நாமக்கல், 

சேந்தமங்கலம் அருகே உள்ள மலைவேப்பன்குட்டை கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திரண்டு வந்து புகார் மனு ஒன்றை போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

எங்களது ஊரில் பழைய விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் படியில் உட்கார்ந்து எங்கள் ஊரை சேர்ந்த சிலர் மது குடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் 4 பேர் அங்கு அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர்.

இதை பார்த்த லோகு, ராஜேஸ்கண்ணன் ஆகிய இருவரும் ஏன் கோவிலில் அமர்ந்து மது குடிக்கிறீர்கள் என தட்டிக்கேட்டு உள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இரும்பு கம்பியால் தட்டிக் கேட்டவர்களை தாக்கினர். பொதுமக்களையும் கைகளால் அடித்தனர். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்க சென்றவர்களை அரிவாளால் வெட்ட முயன்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் பேளுக்குறிச்சி போலீசார் தங்களுக்கு உதவியாக இருப்பதாக கூறி வருகின்றனர். எனவே தாங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்