எண்ணேகொள்புதூர் தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு
எண்ணேகொள்புதூர் தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எண்ணேகொள்புதூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எண்ணேகொள் கிராமத்தில் 1,700 குடும்பங்கள் உள்ளது. கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த எண்ணேகொள்புதூர் தடுப்பணைத் திட்ட வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் அமைக்க கிராம மக்கள் ஒப்புதல் அளித்து விட்டோம். ஆனால் தற்போது சிலர் புதிதாக வாணியாறு திட்டம் வேண்டும் என்று கூறுகிறார்கள்.
வாணியாறு திட்டம் என்பது விவசாயிகளின் பட்டா நிலம் 850 ஏக்கரில் சுமார் 300 ஏக்கர் நிலம் பாதிப்படையும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். அந்த பகுதியில் உள்ள கிணறுகள், வீடுகள், கோவில்கள் மற்றும் மேற்கு புறம் கூட்டூர் கிராமம் மூழ்கி விடும். அதைக் கட்டுவதற்கு சாத்தியமான இடமும் இல்லை. வாணியாறு திட்டத்திற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்க மாட்டோம். ஏற்கனவே அரசின் திட்டத்தில் உள்ள எண்ணேகொள்புதூர் தடுப்பணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த அனைத்து ஊர்பொதுமக்களும், விவசாயிகளும் ஏற்றுக்கொள்கிறோம். எனவே வாணியாறு திட்டத்தை ரத்து செய்து எண்ணேகொள்புதூர் தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.