துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளை சம்பவம்: டாஸ்மாக் பணியாளர்கள் 2-வது நாளாக கடைகளை அடைத்து போராட்டம் அதிகாரி சமரசம்

டாஸ்மாக் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று 2-வது நாளாக கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-12-17 22:45 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் ஊழியர்களை 2 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3.50 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 119 டாஸ்மாக் கடைகளில் 75 சதவீத டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் மூடப்பட்டன. மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் பையனப்பள்ளியில் உள்ள குடோன் முன்பு திரண்டனர். இதையடுத்து சேலம் மண்டல முதுநிலை மேலாளர் இளங்கோ, பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கடைகளை திறக்கப்பட்டது.

இந்தநிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக டாஸ்மாக் பணியாளர்கள் மதுக்கடைகளை திறக்காமல் போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் பையனப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் குடோனில் ஊழியர்கள் திரண்டனர். அப்போது, அனைத்து பணியாளர்கள் சார்பில், நிர்வாகிகள் மாவட்ட மேலாளர் தேவிகா பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகும் தொகையை இரவு 9 மணிக்குள் நிர்வாகமே பெற்றுக் கொள்ள வேண்டும். மதுபான கடைக்கு மாலை முதல் இரவு வரை போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை தாக்கினால் குண்டர் சட்டத்தின் சிறையில் அடைக்க வேண்டும். அரசு டாஸ்மாக் ஊழியர்கள் சமூக விரோதிகளால் பாதிப்படையும் போது அரசே உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

ஊழியர்கள் சிகிச்சை பெற்று உடல்நிலை சீராகும் வரை உரிய மாத சம்பளம் மற்றும் மருத்துவச்செலவு வழங்க வேண்டும். பணி நேரத்தை இரவு 10 மணி என்பதை குறைக்க வேண்டும். மதுபானக்கடையில் திருட்டுப்போகும் பணத்தை ஊழியர்களே செலுத்த வேண்டும் என நிர்பந்திக்ககூடாது. டாஸ்மாக் பணியாளர்களை பணி நேரத்தில் சமூக விரோதிகள் ஊழியர்களை தரக்குறைவாக தகாக வார்த்தைகளால் பேசினால், போலீசார் அவர்களை கைது செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு, பணிநிரந்தரம், மீண்டும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.

இந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட மேலாளர் தேவிகா உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பணியாளர்கள் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறந்தனர்.

மேலும் செய்திகள்